Sunday, 21 February 2016

நான் ஒரு நீர்ப்புட்டி

நான் ஒரு நீர்ப்புட்டி
நான் மனிதனால் உருவாக்கப்பட்டேன். நான் பல வடிவங்களிலும் வர்ணங்களிலும் இருப்பேன். என்னை மனிதர்கள் பயன்படுத்துவர். குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் என்னை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். என்னுள் நீர் இருக்கும். இப்பொழுது தெரிகிறதா நான் யாரென்று ? ஆம், நான்தான் நீர்ப்புட்டி.
நான் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு நீர்ப்புட்டி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னுடன் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். நான் உருளை வடிவில் இருப்பேன். நான் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இருப்பேன். என்னுள் இருக்கும் நீர் வெளியாகாமல் இருக்க என் தலைப் பகுதியில் வட்டமான மூடியைப் பொருத்தியுள்ளனர்.
ஒரு நாள் என்னையும் என் நண்பர்களையும் பெட்டியில் அடுக்கி வைத்தனர். பிறகு, எங்களைக் கனவுந்தில் ஏற்றினர். அப்போது ஓட்டுனர் ஒருவர் கோத்தா திங்கியில் உள்ள எக்கோன்சேவ் எனும் பேரங்காடிக்குக் கொண்டு செல்வதாக உரையாடிக் கொண்டிருந்தது என் செவிக்கு எட்டியது. கனவுந்தும் நகர்ந்தது. நாங்கள் இருட்டில் இருந்ததால் கிடுகிடுவெனபயத்தால் நடுங்கினோம்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்களை அப்பேரங்காடியில் இறக்கினர். அப்பேரங்காடியின் உரிமையாளர் பணம் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு, அக்கடையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் என்னையும் என் நண்பர்களையும் ஒரு நீண்ட கூடையில் அடுக்கி வைத்தார். எங்கள் மீது ரி. 25 ஒட்டப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அப்பேரங்காடிக்கு அதிகமானோர் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால், இதுவரை நானும் சில நண்பர்களும் யாருடைய கண்களுக்கும் தென்படாமல் அங்கேயே உள்ளோம். ஒரு நாள் சிறுவன் ஒருவன் தன் அம்மாவோடு அப்பேரங்காடிக்கு வந்தான். அவனுடைய நீர்ப்புட்டி உடைந்ததால் புதியதாக ஒன்றை வாங்குவதற்கு அங்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன், இறுதியில் காந்தம் இரும்பைக் கவர்வது போல நான் அவனுடைய மனதை ஈர்த்தேன். நான்தான் வேண்டும் என்று குரங்குப் பிடியாக அவனுடைய அம்மாவிடம் பிடிவாதம் பிடித்தான். அவரும் வேறுவழியில்லாமல் என்னைப் பணம் கொடுத்து வாங்கினார். அச்சிறுவன் மிகவும் உச்சிக் குளிர்ந்தான்.
என் எஜமான் என்னைச் சுத்தமாகக் கழுவி காய வைத்தார். மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போது என்னுள் நீரை நிரப்பி எடுத்துச் சென்றார். நான் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அவருடைய நண்பர்கள் பலர் என் அழகை இரசித்தனர். என் எஜமான் தன் நண்பர்களிடம் என்அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார். ஒவ்வொரு நாளும் என் எஜமான் என்னை மறவாமல் பள்ளிக்குக் கொண்டு செல்வார். அவருக்குத் தாகம் எடுக்கும் போது என்னுள் இருக்கும் நீரை அருந்திக் கொள்வார். மேலும், பிரத்தியேக வகுப்பிற்குச் சென்றாலும் என்னைக் கையோடு கொண்டு செல்வார். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டாலும் என்னுள் நீரை நிரப்பிக் கொண்டு எடுத்துச் செல்வார். என் எஜமான் கண் இமை காப்பது போல் என்னை மிகவும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறார்.

வருடங்கள் உருண்டோடின. நானும் நிறம் மாறினேன். என் எஜமான் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லவிருப்பதால் என்னை மறுபயனீடு செய்யும் குப்பைத்தொட்டியில் வீசி புதிய நீர்ப்புட்டி ஒன்றை வாங்கினார். என் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அவ்வழியே அட்டைகளையும் புட்டிகளையும் சேகரித்துக் கொண்டிருந்த ஓர் ஏழை முதியவர் என்னையும் அவர் வைத்திருந்த நெகிழியில் போட்டார். வீட்டிற்குச் சென்றதும் அம்முதியவரும் அவருடைய பேரனும் நெகிழியில் இருந்த புட்டிகளைத் தரம் பிரித்தனர். அப்போது அச்சிறுவன் நான் இன்னும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவன் என்னைப் உபயோகிக்க ஆரம்பித்தான்

1 comment:

  1. நன்றி ஐயா.. பயனுள்ள கட்டுரைகள்..

    ReplyDelete