Thursday, 25 February 2016

உரை – புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்

உரைபுறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்
           மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம். இப்பொன்னாளில், புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்கள் முன் பேச வாய்ப்பளித்த ஆசிரியருக்கு நன்றி.
அவையோர்களே,
          புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது. வகுப்பில் கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும் துணைப்புரிகிறது.
நாளைய தலைவர்களே,
         பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான பண்புகளை கற்று, பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.
அறிவுக்களஞ்சியங்களே,
           தொடர்ந்து, மொழிக்கழகங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் மொழியாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பும் மேலோங்குகிறது. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதற்கேற்ப மாணவர்களின் ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்த மொழிக்கழகங்கள் துணைப்புரிகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்கள் கழகங்களில் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் மொழியாற்றலை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் முடிகின்றது. அதுமற்றுமின்றி, மொழி கழகத்தில் ஒரு மாணவன் தலைவர் பொறுப்பு வகிக்கும் பொழுது அவனுள் தன்னொழுக்கம், கட்டளை இடுதல், கட்டொழுங்கைக் காத்தல், பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகள் இணைந்தே வர வாய்ப்புண்டு.
இளம் விளையாட்டு வீரர்களே,
         “ ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பாஎன அன்றே பாரதியார் பாடியுள்ளார். உடல் நலத்தைப் பேண விளையாட்டு ஒரு முக்கியமானதாக விளங்குகிறது. புறப்பாட நடவடிக்கையில் விளையாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி முக்கியம் என சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் நேரத்தை நல்வழியில் செலவிடவும், அவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும் முடிகிறது. உதாரணமாக, நமது நாட்டு பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சொங் வே ஒரு நேர்காணலில் தனது இந்த வெற்றிக்குக்  காரணம் தனது சிறுவயதிலிருந்தே புறப்பாட நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் எனக் கூறினார்.
அன்பார்ந்த மாணவர்களே,

         ஆகவே மாணவர்களே, ஒரு மனிதனை உருவாக்குவது பள்ளிப் புறப்பாட நடவடிக்கையாகும். நற்பண்புள்ளவனாகவும் , தன்னலம் கருதா மாந்தனாகவும் உருவாக பள்ளி புறபாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆகையால், ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு மேன்மை பெற வேண்டும் என கூறி, நன்றியையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி,வணக்கம்.

No comments:

Post a Comment