நீரின் பயன்
நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ இயலாது. நீரின் மூலங்கள் பல. நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இப்பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
நீர் மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளில் மிக அடிப்படையானது. மனிதர்களுக்குக் குளிக்க, சமைக்க, பாத்திரங்கள் வாகனங்கள் போன்றவற்றைக் கழுவ நீர் இன்றியமையாததாக அமைகிறது. மேலும், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தினமும் நீரை அதிகளவில் பருக வேண்டுமென்று மருத்துவம் கூறுகிறது. தினசரி ஒரு குறிப்பட்ட அளவு நீரைப் பருகும் ஒருவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் நீர் இன்றியமையாததாக இருக்கின்றது. நீர் இல்லாமல் வறண்ட நிலங்களில் விவசாயம் என்பது எட்டாத கனிதான். எனவேதான், வாய்க்கால் வெட்டி, அணைகட்டி விவசாயத்திற்கு நீர்ப்பாசானம் செய்கின்றனர். மழை பொய்த்து, நீர் இல்லாமல் விவசாயிகள் அல்லல் படும் போது, அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகத்தான், அரசாங்கங்கள் நீர்ப்பாசானத் துறையை ஏற்படுத்தி விவசாயத்திற்கு எப்போதும் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன.
மின்சார உற்பத்திக்கும் நீரே காரணமாய் அமைகிறது. வேகமாக ஒடும் நதிகளில் அணைக்கட்டுகளைக் கட்டி, அதிலிருந்து அதிக சக்தியுள்ள மின்சாரத்தை எடுக்கின்றனர். இதுவே, மிக எளிய முறையாகவும், சிக்கனமானதாகவும் கருதப்படுகிறது. இன்றைய நவீன உலகில் மின்சாரம் இல்லையென்றால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது அல்லவா ! இதற்கு நீர் தானே காரணமாய் அமைகிறது !
பண்டைய காலந்தொட்டு இன்றைய காலம் வரைக்கும்போக்குவரத்துக்கு நீர் பெரும் பங்காற்றுகிறது.. சாலை வசதிகளும் இரயில் தண்டவாள வசதிகளும் இல்லாத பல இடங்களில் இன்னும் ஆறுகளே முக்கியப் போக்குவரத்து ஊடகங்களாக விளங்குகின்றன. அதிகளவில் மிக சிக்கனமான முறையில் பொருள்களைக் கொண்டு செல்ல கடல் போக்குவரத்தே இன்றும் பெரிதும் விரும்பப்படுகிறது.
எனவே, நீர் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம்.
No comments:
Post a Comment