Thursday, 25 February 2016

உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைத்தால்……

      உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைப்பது அரிதாகும்.அவ்வாறு கிடைத்தால் அரிய பல காரியங்களைச் செய்ய முடியும். உருவத்தை மறைக்கும் ஆற்றலைக் நற்காரியங்களுக்குப் பயன்படுத்துவதே சிறப்பாகும். .தீமையான செயலுக்கு அவ்வாறான ஆற்றலைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறாகும்.எனக்கு அப்படியோர் ஆற்றல் கிடைத்தால் சொல்லாலான மகிழ்ச்சியடைவேன்.
      இவ்வுலகில் இன்று பல குற்றச்செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.பெரியவர் முதல் சிறியோர் வரை பல தீமை தரும் செயல்களைச் செய்து வருகின்றனர்.இதனால் பொது மக்களுக்கும் நாட்டுக்கும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன.எனக்கு உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைத்தால் இவற்றைத் தடுக்க முயற்சி செய்வேன்.
      பொதுமக்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் போதைப் பொருள்களை ஒழித்தே ஆக வேண்டும்.ஆனால்,மிகவும் இரகசியமாகச் செயல்படும் தீய சக்தியினர் காவல் துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுத் தப்பித்து விடுகின்றனர்.அவர்கள் செயல்படும் இடங்களுக்கு மாயமாய்ச் சென்று தகவல்களை அறிந்து காவல்துறைக்குத் தெரிவிப்பேன்.இதன் மூலம் நாட்டின் இளையோரைக் கெடுக்கும் போதைப்பொருள் விநியோகத்தை முற்றாகத் துடைத்தொழிக்கப் பாடுபடுவேன்.
      கள்ளக் குடியேறிகளாலும் நம் நாட்டிற்குப் பல சங்கடங்கள் ஏற்பட்டு வருகின்றன.இவ்வாறு ஆயிரக்கணக்கில் கள்ளத் தோணிகள் மூலம் கொண்டு வரப்படும் இவர்களைக் கட்டுப்படுத்தவில்லையெனில் நாட்டின் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்படுவது திண்ணம்.எனவே,எனக்குள் உருவத்தை மறைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அவர்கள் நாட்டுக்குள் நுழையும் இடங்களைக் கண்காணித்துக் காவல்துறைக்கு உதவுவேன்.
      இதுமட்டுமல்லாது,கடலில் பயணம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களைக் கண்காணிப்பேன்.அவர்கள் பயணிக்கும் திசையினை மாயமாய் மறைந்து நோட்டமிட்டுக் கடல் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பேன்.இதன் மூலம் கடற்பயணிகள் நிம்மதியாகப் பிராயணம் செய்வதை உறுதி செய்வேன்.
      இவ்வாறு நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு உருவத்தை மறைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வேன்.அத்தகைய ஆற்றல் கிடைத்தால்,நான் பேரின்பம் அடைவதோடு இறைவனுக்கு நன்றி மாலையினைச் சமர்ப்பிப்பேன்.



No comments:

Post a Comment