அன்று ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருந்தது. அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தனர். ஆம், அன்று ஆறாம் ஆண்டு மாணவர்கள் ஆசிரியர் திரு மோகனுடன் சாரணர் முகாம் ஒன்றை மேற்கொண்டனர்.
காலை மணி 7.00க்கு பேருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு ‘குனோங் லேடங்கை’ நோக்கி சிட்டாய் பறந்தது. “டேய் ராமு, எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்குடா. இந்த வாய்ப்புக்காக நான் ரொம்ப நாளா காத்திருந்தேன்,” என்று முகம் மலர பாலன் ராமுவிடம் கூறினான்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு குனோங் லேடாங்கின் பசுமையான காட்சி மாணவர்களின் மனதை ஈர்த்ததோடு கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. மாணவர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. சற்றும் நேரத்தை ஆறப் போடாமல் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். ஆசிரியர் திரு மோகன் சாரணர் முகாமிற்கான விதிமுறைகளைத் தெள்ள தெளிவாக விளக்கினார். மாணவர்கள் அனைவரும் பொறுமையாகச் செவிமடுத்தனர்.
குனோங் லேடாங் மலையை ஏறுவதற்கு அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். ஆசிரியர், “மாணவர்கள் அனைவரும் வரிசையாக என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். கவனம் தேவை. வழி தவறினால் மிகவும் கஷ்டமாக இருக்கும்,” என்று அறிவுரை கூறினார். மாணவர்கள் எறும்பைப் போல் வரிசையாக ஆசிரியரைப் பின் தொடர்ந்தனர். செல்லும் வழியில் மாணவர்கள் வண்டுகளின் ரீங்காரமிடும் ஓசைகளையும் பறவைகளின் கீச்சிடும் ஓசைகளையும் கேட்டு மெய் மறந்தனர்.
ஓர் அழகிய பறவையைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராமு, சோமு, பாலன் ஆகிய மூவரும் தங்கள் குழுவிலிருந்து பிரிந்து வழியைத் தவறிவிட்டனர். நடுக்காட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். “ஐயோ! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! ” என்று மூவரும் கூச்சலிட்டனர். உடனே, பாலனுக்கு ஒரு யோசனை வந்தது. தன் கால் சட்டை பையிலிருந்து தான் கொண்டு வந்த கைத்தொலைபேசியை வெளியே எடுத்தான். சோமுவும் ராமுவும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர். “டேய், யாரோட டெலிபோன் இது? எப்படி நீ எடுத்துட்டு வந்தே?” என்று பாலனை நோக்கி ராமு வினவினான். “சும்மாதான் எடுத்துட்டு வந்தேன். இது என்னோடதான்,” என்றான். உடனே பாலன் கைத்தொலைபேசியின் மூலம் ஆசிரியரைத் தொடர்புக் கொண்டான். நடந்தவற்றைக் கூறினான். ஆசிரியரின் வழிக்காட்டலின் படி அம்மூவரும் வழியைத் தேடிச் சென்றனர்.
சிறிது நேரத்தில் தங்களின் சக நண்பர்களையும் ஆசிரியரையும் கண்டனர். அம்மூவரும் உச்சிக் குளிர்ந்தனர். ஆசிரியர் அறிவுரை கூறினார். அம்மூவரும் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டனர். பிறகு மீண்டும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. மலை உச்சியை அடைந்து முகாமை மேற்கொண்டனர். பிறகு, இரண்டு நாட்கள் கழித்து குனோங் லேடாங்கிற்கு விடை கொடுத்துவிட்டு இல்லம் திரும்பினர்.
No comments:
Post a Comment