Sunday, 21 February 2016

நான் ஒரு காலணி


நான் ஒரு காலணி
       கண் விழித்தேன். கண்கள் என் உரிமையாளரைத் தேடின. ஒரே இருட்டு. என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது. இருட்டிலிருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று தவித்தேன். அங்கும் இங்கும் முட்டிக் கொண்டேன். நான் குப்பைத் தொட்டினுள் இருப்பதை உணர்ந்தேன். என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன. என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன். நான் ஒரு காலணி. நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன். என் பெயர் அடிடாஸ். மல்லிகைப் பூ போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்.
   அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன் என்ற மகிழ்வு ஒருபுறம். என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். ஒரு நாள், ஷா ஆலமிலிருந்து குளுவாங் எனும் ஊருக்கு ஒரு கனரக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டோம். அங்கு ஒரு பெரிய கடையில் எங்களை இறக்கினார்கள். அக்கடைக்காரர் எங்களைக் கண்ணாடி அலமாரியில் முறையாக அடுக்கி வைத்தார். அந்தக் கடைக்குப் பலர் வந்து சென்றனர். இப்படியே பல நாட்கள் ஓடின. நான் மிகவும் மகிழ்ச்சியாக என் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்.
    ஒரு நாள், ஒரு சிறுமி தன் தாயுடன் அங்கு வந்தாள். என்னைக் கூர்ந்து நோக்கினாள். தன் தாயின் காதில் கிசுகிசுத்தாள். அவர் அந்தக் கடைக்காரரிடம் என்னைச் சுட்டிக் காட்டி என் மதிப்பை விலை பேசினார். இறுதியில், என்னை விலைகொடுத்து வாங்கினார். என் கன்னத்தில் ஏதோ வழிந்தோடியது போல் இருந்தது. தொட்டுப் பார்த்தேன். சந்தேகமில்லை. அஃது என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்தான். என் சகோதரிகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கவலையுடன் அச்சிறுமியுடன் சென்றேன். என் உரிமையாளரின் அரவம் கேட்டு நான் எண்ண அலைகளிலிருந்து விடுபட்டேன்.
  என் உரிமையாளர் ஒவ்வொரு புதன்கிழமையும் என்னைத் தரமான ஷாம்புவால் குளிப்பாட்டுவார். வெள்ளைப் பூசி என்னை வெயிலில் உலர வைப்பார். இதமான வெயிலின் ஒளியில் நான் குளிர்காய்ந்து கொண்டிருப்பேன். நான் எப்பொழுதும் தூய்மையாக இருப்பேன். என் உரிமையாளர் என்னை எங்குச் சென்றாலும் என்னைத் தம் காலில் அணிந்து கொள்வார். நானும் அவருக்கு இரவு பகல் பாராமல் உழைத்தேன்.

      எனக்கு வயது ஏறிக்கொண்டே போனது. வயதானதால் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதை என் எஜமானியான அச்சிறுமி கவனித்தார். நான் இன்னும் பல நாட்களுக்கு உழைக்க மாட்டேன் என்று முடிவு செய்து அருகில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் என்னை வீசிய வேகத்தில் என் தேகம் முழுவதும் காயம்பட்டு, வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா என் பரிதாப நிலையை!

No comments:

Post a Comment