Thursday, 25 February 2016

எனக்குப் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினி கிடைத்தால் …

எனக்குப் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினி கிடைத்தால்
        நம் நாடு துரித வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாடு. பிற நாடுகளுக்கு ஈடாக நமது நாடும் தகவல் யுகத்திற்கு ஏற்ப மாற்றங்கண்டு வருகிறது. எல்லாத்துறையிலும் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வேளையில் எனக்குப் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினி ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும்?
       முதலில் அக்கணினி ஒரு தானியங்கியாகச் செயல்படும். நான் கல்வி தொடர்பாகப் பெற விரும்பும் தகவல்களைக் கேட்டவுடனேயே, அது ஒப்புவிக்கும். போதுமான ஆதாரங்களுடன் விளக்கமளிக்கும். எழுத்து வடிவில் பெறும் தகவலை விட அதன் பேசும் சக்தியால் கேட்கப்பெறும் தகவல் எனக்கு மட்டும் அல்ல என்னைச் சார்ந்தவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
      மேலும், அக்கணினியை எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க நான் பயன்படுத்துவேன். தினசரி நான் கற்கும் பாடங்களை அது ஒப்புவிக்கும். பாடத்தில் எழும் சந்தேகங்களைக் கணினி திரை காட்சியில் எனக்கு மேலும் விளக்கப்படுத்தும். இதன் வழி எனது கல்வித் திறனை நான் மேம்படுத்திக் கொள்வேன். தொடர்ந்து அக்கணினியின் வழி நமது சான்றோர்களான திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் போன்றோர் இயற்றிய செய்யுள்களையும் கவிதைகளையும் முறையாக உச்சரிக்க வைத்து நானும் முறையாகக் கூறிப் பழகுவேன். அத்தோடல்லாமல் பிற மாணவர்களும் அதன் பயன் பெற்று இன்புற வழி வகுப்போம்.

     பள்ளி மாணவர்களும் என் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினியால் மகிழ வேண்டும் அல்லவா? அதனால் என் மடிக் கணினியைக் கொண்டு விடுகதைகள், குறுக்கெழுத்துப் போட்டி, புதிர்போட்டி போன்ற மொழிவிளையாட்டுகளை நடத்துவேன். என் மடிக் கணினி கேள்விகள் கேட்க மாணவர்கள் பதில் அளிப்பார்கள் அல்லது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என் மடிக் கணினியும் பதில் அளிக்கும். இதன் மூலம் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தும் தரும். இத்தகையப் பயன் மிக்க மடிக் கணினி கிடைக்குமென நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment