Thursday, 25 February 2016

நீரின் பயன்

நீரின் பயன்
      நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ இயலாது. நீரின் மூலங்கள் பல. நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இப்பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
      நீர் மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளில் மிக அடிப்படையானது. மனிதர்களுக்குக் குளிக்க, சமைக்க, பாத்திரங்கள் வாகனங்கள் போன்றவற்றைக் கழுவ நீர் இன்றியமையாததாக அமைகிறது. மேலும், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தினமும் நீரை அதிகளவில் பருக வேண்டுமென்று மருத்துவம் கூறுகிறதுதினசரி ஒரு குறிப்பட்ட அளவு நீரைப் பருகும் ஒருவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
      இதுமட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் நீர் இன்றியமையாததாக இருக்கின்றது. நீர் இல்லாமல் வறண்ட நிலங்களில் விவசாயம் என்பது எட்டாத கனிதான். எனவேதான், வாய்க்கால் வெட்டி, அணைகட்டி விவசாயத்திற்கு நீர்ப்பாசானம் செய்கின்றனர். மழை பொய்த்து, நீர் இல்லாமல் விவசாயிகள் அல்லல் படும் போது, அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகத்தான், அரசாங்கங்கள் நீர்ப்பாசானத் துறையை ஏற்படுத்தி விவசாயத்திற்கு எப்போதும் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன.
      மின்சார உற்பத்திக்கும் நீரே காரணமாய் அமைகிறது. வேகமாக ஒடும் நதிகளில் அணைக்கட்டுகளைக் கட்டி, அதிலிருந்து அதிக சக்தியுள்ள மின்சாரத்தை எடுக்கின்றனர். இதுவே, மிக எளிய முறையாகவும், சிக்கனமானதாகவும் கருதப்படுகிறது. இன்றைய நவீன உலகில் மின்சாரம் இல்லையென்றால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது அல்லவா ! இதற்கு நீர் தானே காரணமாய் அமைகிறது !
      பண்டைய காலந்தொட்டு இன்றைய காலம் வரைக்கும்போக்குவரத்துக்கு நீர் பெரும் பங்காற்றுகிறது.. சாலை வசதிகளும் இரயில் தண்டவாள வசதிகளும் இல்லாத பல இடங்களில் இன்னும் ஆறுகளே முக்கியப் போக்குவரத்து ஊடகங்களாக விளங்குகின்றன. அதிகளவில் மிக சிக்கனமான முறையில் பொருள்களைக் கொண்டு செல்ல கடல் போக்குவரத்தே இன்றும் பெரிதும் விரும்பப்படுகிறது.

      எனவே, நீர் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம்.

கணினி

கணினி
    இன்றைய நவீன காலத்தில் கணினி உலகையே சுருக்கிவிட்டது என கூறினால் அது மிகையாகாது. மின்னஞ்சல், இணையம் என்பதன் வழி உலகின் எந்த மூலையையும் நாம் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். நம் உறவினர்களோ அல்லது நண்பர்களோ, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கணினியின் மூலம் அவர்கள் முகத்தைப் பார்த்து, நேரடியாக உரையாட முடியும். இணையத்தின் வழி எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். இது, மாணவர்கள் மட்டுமன்றி, எல்லாத் துறையினருக்கும் பெரும் பயனாய் அமைகிறது.
         அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின்  விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது. தனக்கு வேண்டிய தவகல்களை உடனே தர கணினியால் மட்டுமே முடியும். மேலும், தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ள கடவுச்சொல்லையும் கணினியில் வைத்துக் கொள்ளலாம். இதன்  மூலம் மற்றவர்கள் தவகல்களைத் திருடுவது கடினமாகும்.

        கணினியின் பயனை வெறும் வார்த்தைகளால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால் அளப்பது போன்றதாகும். எந்தத் துறையால் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று யாராலும் கூற முடியாது. எனினும், நாணயத்திற்கு உள்ள இரு பக்கங்களைப் போல் கணினிக்கும் தீமை என்ற மறு பக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே, நன்மையை மட்டுமே நாடினால் எதுவுமே நன்மையாகத்தான் முடியும்.

கணினியின் பயன்

கணினியின் பயன்
        இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் என்னவெனில் கணினி எனலாம். மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை. கணினி மனிதனுக்குப் பல வகைகளில் பயனான ஒன்றாக விளங்குகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள் மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின் கையே மேலோங்கி நிற்கிறது.
       கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. தற்போது எல்லா பள்ளிகளிலும் கணினி வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் கணிதப் பாடங்களுக்காக பள்ளிகளில் மடிக்ககணினிகள்,ஒளியிழை வட்டுகள், பாட செறிவட்டுகள், போன்றவை கல்வி அமைச்சால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும் அறிவியல், கணிதப் பாடங்களை இவற்றின் மூலம் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர்மேலும், கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள அரசாங்கம், பள்ளிகளில் கணினி மையங்களையும் அமைத்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், பல கோடி வெள்ளியை அரசாங்கம் செலவு செய்வது கணினியின் அவசியத்தை உணர்த்துகிறது.

      மருத்துவத்துறையிலும் கணினி பெரும் பங்காற்றுகிறது. தற்போது, நோய்களுக்கான காரணங்கள், அதற்கான ஆய்வுகள், மருந்துகள் போன்றவற்றிற்குக் கணினியின் உதவி பெருமளவில் நாடப்படுகிறது. உடலில் உள்ள நோய்களைக் கணினியின் மூலமே ஆய்ந்து, கண்டுபிடிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ‘சிட்டி ஸ்கேன்எனப்படும் இயந்திரத்தின் வழி, தலையில் ஏற்படும் பிரச்சினைகளை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும். மேலும், அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கும் கணினியே பெருமளவில் உற்ற நண்பனாய் விளங்குகிறது.